2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது, ஆன்லைனில் தாம் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஆம், நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபல ஆன்லைன் உணவு தளமான ஸ்விகியில் இணைந்துள்ள ஒரு ரெஸ்டோரண்டில் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த பிரைட் ரைஸில் கரப்பான்பூச்சி கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அதை புகைப்படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இதுபோன்று ஒரு முறை உணவு ஆர்டர் செய்ததில் கரப்பான்பூச்சி கிடந்ததாகவும், எனவே இது முதல் முறை அல்ல, இது இரண்டாவது முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி தமது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “இதுபோன்ற சில உணவகங்களில் ரெகுலரான அடிப்படையில் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுடைய உணவு தரத்தை டெலிவரி செய்யும் முன் அவர்கள் கவனிக்க தவறினால் அபராதம் விதிக்க வேண்டும்.” என குறிப்பிட்டு அத்துடன் அந்த ஹோட்டலின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்பு அவர் ஸ்விகியின் இனையவழி புகார் சேவையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு ஸ்விகி வாடிக்கையாளர் சேவை தரப்பில் இருந்து நிவேதா பெத்துராஜ் ஆர்டர் செய்த உணவிற்கான பணத் தொகையை திருப்பித் தருவதாக உத்திரவாதம் அளித்தனர். இதனை அடுத்து, ஸ்விகி அளித்த இந்த பதிலையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
நிவேதா பெத்துராஜின் கைவசம் தற்போது பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. அத்துடன் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.