பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் நடிகர் ஜெமினி கணேசன் இருவரின் வாரிசு, அதாவது இவர்களின் பேரனான அபினய் முக்கிய போட்டியாளராக இணைந்திருக்கிறார்.
பெரிதாக எதிலும் தலையிடாமல் இருப்பது போல் இருக்கும் அபினய் ஏதாவது ஒரு நேரத்தில் தன் கருத்தை சற்றே அழுத்தமாகவும் தேவைப்பட்டால் காட்டமாகவும் தெரிவித்துவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அனைத்து டாஸ்குகளிலும் மிகவும் ஆக்டிவாக விளையாண்டு கொண்டு இருக்கும் அபினய்க்கு தற்போது நிரூப்புடன் ஒரு சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் பிற போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பொம்மைகளை தூக்கிக்கொண்டு கூடாரத்துக்கு ஓடிச் செல்லக்கூடிய டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் பெயர் எழுதப்பட்ட பொம்மைகளை தவிர்த்து பிற போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பொம்மையை தூக்கிக்கொண்டு மட்டுமே ஓட முடியும்.
அப்படி போகும் போது, கடைசியாக ஓடி வருபவர் கையிலிருக்கும் பொம்மையில் யார் பெயர் எழுதப்பட்டு இருக்கிறதோ, அந்த போட்டியாளர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்த போட்டியின் மூலம் ஒருவர் நினைத்தால் மற்ற போட்டியாளரை காப்பாற்றலாம், ஒருவர் நினைத்தால் சக போட்டியாளரை கூட வெளியேற்றுவதற்கான வேலையை சூழ்ச்சி மூலம் செய்ய முடியும்.
இந்த டாஸ்கிலும் ஏகப்பட்ட சண்டைகளும், சச்சரவுகளும் நடைபெற்றன. குறிப்பாக நிரூப் - வருண் வாக்குவாதம், சிபி - அக்ஷரா வாக்குவாதம் என சண்டைகள் வலுத்தன. இந்த சண்டைகள் வழக்கத்துக்கு மாறாக ஆக்ரோஷத்துடன், சற்று அநாகரீகமான வார்த்தைகளுடன் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போட்டியாளர்கள், இந்த போட்டிகளுக்கு பிறகு ஒவ்வொரு பொம்மையையும் எடுத்துக் கொண்டு அந்த பொம்மைக்குரிய நபரைப் பற்றிய தங்களுடைய கருத்தையும் மதிப்பீட்டையும் முன்வைக்க வேண்டும். அப்படி இசைவாணி இமான் அண்ணாச்சியின் பொம்மையை எடுத்து, அந்த பொம்மை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, “இந்த பொம்மை ஐக்கியை கைப்பாவையாக பயன்படுத்தியதாக தோன்றுகிறது!” என்று கூற, அப்போது நிரூப் இடைமறித்து “அப்படியானால் நீ அபினய்க்கு கைப்பாவையா?” என்று கூறினார்.
உடனே அபினய் இடைமறித்து நிரூப்பிடம், “ஹே என்னை பற்றி ஏன் அனாவசியமாக பேசுகிறாய்? அப்போது நான் அப்படி செயல்பட்டதை நீ பார்த்தாயா?” என்றெல்லாம் கேட்க, “நான் அவளிடம் பேசும் பொழுது உனக்கு என்ன?” என்று நிரூப் மீண்டும் கொதிக்கிறார். தன்னைப் பற்றிப் பேசியதால்தான், தான் கேப்டதாக அபினய் பதில் கூற, அதற்கு பதிலளித்த நிரூப், “நீ எப்போதுமே இப்படித்தான்.. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நீயாக உள்ளே வந்து, எல்லாம் தெரிந்தது போல், ஆனால் அங்கு நடப்பது என்னவென்றே தெரியாமல், சம்பந்தமே இல்லாமல் கருத்து பேசிவிட்டு செல்வாய்!” என்று கூறுகிறார்.
மேலும் கைப்பாவை என்கிற வார்த்தையை மாற்றி ஜால்ரா என்று நிரூப் சொல்ல, அபினய்க்கு கோபம் வந்துவிட்டது. உடனே அபினய் “நீ இப்படி வாயை விடாதே.. ஏன் சும்மா என்னை நோண்டுற?” என்று கேட்பதற்கு, “நான் உன்னை நோண்டிட்டு இருக்கேனா? சொல்லு நான் என்ன வாயை விட்டேன்.. உண்மையதானே சொன்னேன்.. ஜால்ரா” என்று கூறுகிறார். இப்படியே சில நேரங்களுக்கு இவர்களின் வாக்குவாதம் அமைதியான முறையில் நீடித்தது.