தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமான நடிகை நயன்தாராவுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
Also Read | ஜாலியோ ஜிம்கானா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'பீஸ்ட்' படத்தின் வேற லெவல் BTS போட்டோ!
அண்மையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த தம்பதியர் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் தங்களது திருமணத்தை தடபுடலாக நடத்தியதை அடுத்து இவர்கள் இன்னும் ட்ரெண்ட் ஆகினர். ரசிகர்கள் தொடர்ச்சியாக இவர்களின் பயணம் தொடர்பான அப்டேட்ஸை பெற்று வருகின்றனர். முன்னதாக திருமணத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நயன்தாரா திருமணத்துக்கு பின்பும் ஊடகத்தினரின் தொடர் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா, திருமணத்துக்கு பின்னர் கணவர் விக்னேஷ் சிவனுடன் கேரளாவுக்கு சென்ற புகைப்படங்களையும் இணையத்தில் காண முடிந்தது. இந்நிலையில் நயன்தாராவின் பெயருக்கான தமிழ்ப் பெயர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட 'நயன்தாரா'-வை தமிழில் என்ன பெயர் சொல்லி அழைப்பது என்கிற பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சில பக்கங்களில் விவாதமாகவும் போய்க்கொண்டிருக்கிறது இந்த விவகாரம்.
ஆம், யாரோ ஒருவர் நயன்தாரா என்ற பெயர் தமிழ்ப்பெயர் கிடையாது என்றால் அந்த பெயருக்கான தமிழ்ப்பெயர் என கேட்க, அதற்கு பிரபல கவிஞர் ஒருவர் அளித்த விளக்கம் தான் இந்த ட்ரெண்டுக்கே காரணம். ஆனால், அதுவும் அந்த கவிஞர் 2015-ல் கொடுத்த விளக்கம் அது. இப்போது நயன்தாரா பற்றிய பேச்சுகளுடன் இந்த விசயமும் இணைந்துகொண்டது.
அதன்படி, மேற்கண்ட அந்த கேள்விக்கான விடையை கவிஞர் மகுடேஸ்வரன் 2015-ல் பேஸ்புக் பதிவாக எழுதி பதிவிட்டிருந்துள்ளார். தமது அந்த பதிவில், “நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரியத் தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண். தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம். சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரியத் தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன். விண்மீன் என்பதும்கூட கவிதைப்பண்புள்ள உருவகப்பெயர்தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்தபோது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும்.” என்று கவிஞர் மகுடேஸ்வரன் பதிவிட்டுள்ளார்.
இதை இப்போது ட்ரெண்ட் செய்யும் இணையவாசிகள் அடடே.. நயன்தாரா பெயரை இப்படியும் தமிழ்ப்படுத்த முடியுமா? என ஆச்சரியமாக பேசிவருகின்றனர்.
Also Read | ‘மாரி-ல்லாம் Part 2 வருது.. பவர் பாண்டிக்கு எடுக்க கூடாதா.?’.. வீட்ல விசேஷம்.. சத்யராஜ் அல்டிமேட்.!