1990 களின் தொடக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர் நடிகர் நெப்போலியன்.
குமரேசன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் இயக்குனர் பாரதிராஜாவால் நெப்போலியன் என பெயர் மாற்றம் சூட்டப்பட்டார்.
முதலில் வில்லன் வேடங்களில் மிரட்டிய இவர் பின்னர் கதாநாயகனாக பல வெற்றிப் படங்களில் நடித்தார். எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்கள் இன்றளவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன. அரசியலிலும் ஈடுபட்ட அவர் திமுக சார்பில் மத்திய சமூகநீதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தன் முத்திரை பதித்துள்ளவர் நடிகர் நெப்போலியன். சமீப காலங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'சீமராஜா'வில் நடித்திருந்தார். அதேபோல கார்த்தியுடன் 'சுல்தான்' மற்றும் ஹிப் ஹாப் ஆதியோடு அன்பறிவு ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். மேலும் 'டிராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
தனது மகனின் மருத்துவத்திற்காக இப்போது அமெரிக்காவிலேயே தங்கிவிட்ட நெப்போலியனின் பூர்வீகம் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி ஆகும். திமுக அமைச்சர் கே.என். நேருவின் நெருங்கிய உறவினர் நெப்போலியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெப்போலியன் சகோதரர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தங்களது பூர்வீக வீட்டை சுற்றி காட்டியுள்ளார். அப்போது அவர்களது தாய் சரஸ்வதி மற்றும் சிவபக்தரான தந்தை துரைசாமிக்கு கோயில் கட்டிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர்களுடைய குடும்பத்தினர் பெற்றோர்கள் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். சமாதியை சுற்றி தந்தைக்கு பிடித்த சந்தன மரம், கருங்காலி மரம், சிவப்பு செம்பருத்தி மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர்.