இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஒளிபரப்ப இருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், "ஒரு சூப்பர்ஸ்டாராக நயன்தாராவை உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், தனிப்பட்ட மனிதராக அவரை தெரிந்திருக்காது. எனக்கான அனைத்தையும் மாற்றிய காதலுக்குப் பின்னால் உள்ள கதை. மை தங்கம். நயன்தாரா: பியாண்ட் த ஃபெய்ரி டெய்ல் (Nayanthara : Beyond the Fairy Tale) விரைவில் நெட்பிளிக்ஸ் -ல் வெளிவர இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய காதல் பயணம் குறித்து பேசுகின்றனர். தான் திரைபிரபல குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லை என்றும் அதே நேரத்தில் எடுத்த வேலையை 100 சதவீதம் உழைப்பை கொடுக்க நினைக்கும் சாதாரண பெண் எனவும் நயன்தாரா தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவில் நயன்தாரா அருமையான மனிதர் என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருக்கிறார். இருவரது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.