கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இயக்குனர் மணிரத்னம் மற்றும் "பூமிகா டிரஸ்ட்" ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து நவரசா எனும் ஆந்தாலஜி வெப் தொடர் ஒன்றை தயாரித்து அதில் இருந்து கிடைக்கும் நிதியை திரைப்படத் தொழிலாளர்களுக்கு கொடுத்து உதவத் திட்டமிட்டனர்.
அதன்படி 2020 அக்டோபர் மாதத்தில் தமிழின் முன்னணி கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக, ‘நவரசா’ என்னும் ஆந்தாலஜி ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வெளியானது.
அதில் வந்த நிதியை கடந்த மே மாதம் முதல் சுமார் 12 ஆயிரம் திரைத்தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 3 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு இந்த உதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை பாராட்டும் விதமாக நடிகர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"உலகமே இருளில் தத்தளிக்கின்றது. சோடியம் விளக்கு, எல் இ டி விளக்குகளை தேடாமல் சின்னஞ்சிறு தீக்குச்சி உரசல்களுக்காக துழாவி கொண்டிருக்கும் போது அகல் விளக்காய் வந்தது பூமிகா அறக்கட்டளை (poomika trust). வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்கிறது என்பதல்ல. வெளிச்சம் தோன்றியது என்பது தான் மகத்துவம். மிக மிக நேர்த்தியாக திட்டம் வகுத்து அதை நடைமுறை படுத்திய பூமிகா டிரஸ்ட் முன் உதாரணமாக இருக்கிறது. அதன் காரண கர்த்தாக்களாகிய இயக்குனர் திரு. மணிரத்னம், தயாரிப்பாளர் ஜெயேந்திரன் ஆகிய இருவரையும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்வது என் கடமையாகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 400- க்கும் மேற்பட்ட மூத்த நாடக- சினிமா கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஐந்து மாதஙகளுக்கான பொருள் உதவி செய்திருப்பது பல குடும்பங்களின் இருள் போக்கும் விளக்காகிறது. கலைஞர்கள் அனைவரும் நேரில் சென்று வாங்கி சென்றார்கள். பூமிகா டிரஸ்டுக்கு உதட்டளவில் இல்லாமல் ஆழ் மனதிலிருந்து உதவி பெற்ற கலைஞர்கள் சார்பாகவும் நடிகர் சமூகம் சார்பாகவும் நன்றிகளை அர்ப்பணிக்கின்றேன். அவர்கள் நோக்கமும் இலக்கும் வெற்றி அடைவதாக...நன்றியுடன் M. நாசர்" என குறிப்பிட்டுள்ளார்.