புத்தாண்டை முன்னிட்டு நரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் “புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்த கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதேபோல் தமிழில் 'சண்டமாருதம்', 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகர் நரேஷ். பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் மகனானவர் நரேஷ். நடிகை விஜய் நிர்மலாவை மறைந்த நடிகர் கிருஷ்ணா (மகேஷ் பாபுவின் தந்தை) திருமணம் செய்த முறையில், இவர் மகேஷ் பாபுவுக்கு சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 58 வயதாகும் நரேஷ்க்கு, கன்னட நடிகை பவித்ரா லோகேஷுடன் சம்மோகனம் படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தெலுங்கில் அந்தரு பாகுண்டாலி, மிடில் கிளாஸ் அப்பாயி, டூட்டி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர்.
இந்நிலையில், இந்த 2023 புத்தாண்டை முன்னிட்டு நரேஷ் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்ய இருக்கிறோம். உங்கள் ஆசிர்வாதம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், நரேஷ் - பவித்ரா இருவரும் கேக் ஊட்டி, முத்தமிட்டு காதலை வெளிப்படுத்துகின்றனர். இவர்களுக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.