அமலா பால் நடிப்பில் வந்த ஆடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெறும் நங்கேலி ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி கூறியிருந்தாலும், சாதிகள் பற்றி பேசாத மனிதர்கள் தான் இன்றைய உலகில் இல்லை என்று நாம் கூறலாம். ஆம், சாதி ரீதியிலான பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்தால், சாதி வெறியர்களால் அவர்கள் கொல்லப்படுவதும், மேல் சாதியினர், கீழ் சாதியினரை திருமணம் செய்தால் அவர்கள் கொல்லப்படுவதும் இன்றைய சமூகத்தில் நடந்து வரும் ஒரு சோக நிலை தான்.
இது இன்றைய உலகில் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சாதி பயங்கரமானதாய் இருந்துள்ளது. இதனால், பல மக்கள் தங்களது உயிரையும் இழந்திருக்கிறார்கள். கேரளாவில் மார்பக வரியை ரத்து செய்வதற்காக ஒரு பெண் தன் உயிரையே பணயம் வைத்திருக்கிறார். அவர் யார் என்றால், நாங்கேலி தான்.
அன்றைய காலகட்டகத்தில் கீழ் சாதியினர் தங்களது மார்பகங்களை மூடிக்கொள்ளக்கூடாது. அப்படி மூடிக்கொண்டால் அவர்கள் மார்பக வரி செலுத்த வேண்டும். முலக்கரம் என்று அழைக்கப்படும் இந்த மார்பக வரியை அனைத்து கீழ் சாதி பெண்களும் மார்பகத்தை மறைத்தால் வரியை கட்டியாக வேண்டும். அதுவும், மார்பகத்தின் அளவைக் கொண்டு வரி கட்டணம் நிர்ணயிக்கும் முறையும் இருந்தது.
கீழ் சாதி பெண்களால் வரி செலுத்த முடியாது என்பதால், அவர்கள் மேலாடை அணியாமல் இருந்தார்கள். அவர்களில் நாங்கேலி மட்டும் மேலாடை அணிந்து கொண்டாள். இந்த நிலையில், மேல் சாதியினர் வரி வசூலிக்க வந்தனர். அவர்களுக்காக வாழை இலையை விரித்து வைத்திருந்தாள். அருகில் அரிவாளும் வைத்திருந்தாள். வரி கொடுப்பதற்கு போதுமான அரிசி இல்லை.
நாங்கேலியை சோதனையிட வந்த பார்வதியரிடம் வரி விதிப்பதற்காக மார்பகத்தை காண்பித்தாள். அடுத்த நிமிடமே தனது மார்பகத்தை கீழே கிடந்த அரிவாளால் வெட்டி இலையில் போட்டாள். இதனைக் கண்ட மேல் சாதியினர் தப்பித்து உயிருக்கு பயந்து தெறித்து ஓடினர். ஆனால், நாங்கேலியோ அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தாள். இந்த துக்கம் தாங்காத நாங்கேலியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். மார்பக வரியை எதிர்த்து போராடி உயிர் நீத்த நாங்கேலியின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக அவர் வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டு முலச்சி பரம்பு என்று அழைக்கப்படுகிறது.