மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.
லிஜோ, தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்குகிறார். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார்.
வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டது. படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி இணைந்துள்ள BTS புகைப்படம் ஏற்கன்வே வெளியானது.நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தின் பழனி படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். இது பற்றிய BTS புகைப்படம் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
இரு தினங்களுக்கு முன் ரம்யா பாண்டியன் தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்தார். மேலும் நடிகர் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய BTS புகைப்படமும் வெளியாகி உள்ளது. ஒரே மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.