ஐத்ராபாத்: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து தான் எந்த கருத்தும் கூறவில்லை என நாகர்ஜூனா கொந்தளித்துள்ளார்.
சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவரும், நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து 2017 இல் திருமணம் செய்தனர். அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களிடம் பிரபலமான ஒன்றாக மாறியது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார். இருவரும் பிரிந்ததாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் நாக சைதன்யா ஒரு பிரபல முன்னணி சேனலில் பேட்டி அளித்தார். அதில், சமந்தாவின் மகிழ்ச்சியே தனக்கும் மகிழ்ச்சி என்றும், சமந்தாவும் தானும் இப்பவும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமந்தா தான் விவாகரத்து வேண்டும் என முதலில் கேட்டார் என நாகர்ஜூனா கூறியதாக செய்தி வெளியானது. இது திரையுலகில் பரபரப்பை கிளப்பியது. இது குறித்து நாகர்ஜூனா டிவீட் செய்து, "சமந்தா & நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் முற்றிலும் முட்டாள்தனமானது!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். வதந்திகளை அல்ல செய்திகளை கொடுங்கள்" எனக் கூறியுள்ளார்.