தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze டாஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்தது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் வந்து பகிர்ந்து கொண்ட விஷயம், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், அவர்களுக்காக கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
Freeze டாஸ்க் முடிந்ததை தொடர்ந்து, தற்போது இறுதி போட்டிக்கு தன்னுடன் வரும் போட்டியாளர் ஒருவர் பெயரை அனைத்து போட்டியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்போது பேசும் மைனா நந்தினி, விக்ரமன் இறுதி சுற்றுக்கு தன்னுடன் முன்னேறுவார் என கூறியதுடன் போட்டிகளில் அவர் காட்டிய தீவிரமும், ஒரு நிகழ்வை அணுகும் விதமும் பிடித்திருந்தது என்றும் எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் கருத்து கூறியதாகவும் குறிப்பிடும் மைனா, தனிப்பட்ட முறையில் அது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் யாரையும் காயப்படுத்தவில்லை என தெரிவிக்கிறார்.
இதனையடுத்து, மைனாவிடம் சில கேள்விகளை முன்வைக்கும் விக்ரமன், "நான் இறுதி சுற்று வரையில் செல்வேன் என கூறியதற்கு நன்றி. ஆனால், என்னை கருத்துக்களை மட்டுமே கூறுபவர் என நீங்கள் கருதுகிறீர்கள். அப்படி இருக்க, எப்போதும் கருத்தை மட்டுமே சொல்பவரை எப்படி மக்கள் இறுதி சுற்று வரையில் செல்ல அனுமதிப்பார்கள்?" எனக் கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் மைனா,"போட்டிகளில் அனைத்து விதமான டாஸ்க்குகளிலும் சிறப்பான முயற்சியை அளித்திருக்கிறீர்கள். 70 சதவீதம் கருத்து சொன்னாலும், 30 சதவீதம் சிறப்பாக போட்டியில் பங்கெடுத்துள்ளீர்கள்" என்கிறார். அப்போது விக்ரமன்,"அதைத்தான் நானும் கேட்கிறேன். 70 சதவீதம் கருத்து மட்டுமே சொல்றவர் போலியா இருப்பாரு. அவரை எப்படி மக்கள் தேர்ந்தெடுப்பாங்க?" என வினவுகிறார். இதற்கு பதில் அளிக்கும் மைனா,"மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பிடித்திருக்கலாம். அதுவே உங்களுக்கு ஒட்டு அளிக்க செய்திருக்கலாம்" என்கிறார். இதை விக்ரமன் ஆமோதிக்கிறார்.
அதே போல, விக்ரமன் யாரையும் காயப்படுத்தி தான் பார்க்கவில்லை என்றும், அப்படி நடந்தால் கூட உடனே அவரிடம் போய் அவர் மன்னிப்பு கேட்டதையும் தான் பார்த்துள்ளதாகவும், தனக்கே அது நடந்துள்ளதாவும் மைனா குறிப்பிடுகிறார். மைனா மற்றும் விக்ரமன் உரையாடி கொண்டிருப்பதற்கு நடுவே கேள்வி ஒன்றை கேட்கும் அசிம், "இந்த வீட்டில் நிறைய பேர் அப்படி மன்னிப்பு கேட்டு இருக்கிறார்கள். அப்போது விக்ரமனை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?" என குறிப்பிட இதற்கு விளக்கம் கொடுக்கும் மைனா, நிச்சயம் கேட்டிருக்கலாம் என்றும் ஆனால் என்னுடைய பார்வையில் விக்ரமனை கூறுவதாகவும் தெரிவிக்கிறார்.
இப்படி கருத்து தெரிவிப்பவர் டான்ஸ் ஆடவும் மற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் மாட்டார் என கருதிய போது அவர் அதனை செய்ய முயற்சித்ததும் கம்மியாக பர்பாமென்ஸ் செய்தாலும் சர்ப்ரைஸாக அதனை விக்ரமன் கொடுத்துள்ளதாக மைனா தெரிவித்து அதனால் அவர் இறுதி போட்டிக்கு வருவார் என தான் கருதுவதாக கூறுகிறார்.