சென்னை 29.12.2021
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தேசிய விருது
2019 ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அளவில் மிக உயர்ந்த சினிமா விருதான தேசிய விருதை விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் பெற்றிருந்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார். ‘கிருஷ்ணதாசி’ எனும் சண்டிவி சீரியலில் ஏற்கனவே இசைய்மைத்து மெகா சீரியலில் அறிமுகமானவர். மைனா, கும்கி படங்களின் வெற்றி இவரை முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியது.
டி. இமான் லைன் அப்
கடைசியாக அண்ணாத்த, லாபம் படங்களுக்கு இசையமைத்து இருந்தார். இவர் இசையில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2 சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.2008 ஆம் ஆண்டு ஏப்ரல் - 24 அன்று கணினிப் பொறியாளர் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னை நுங்கம்பாக்கம் கதீட்ரல் தேவாலயத்தில் இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
விவாகரத்து...
விவாகரத்து குறித்து டி. இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "எனது நலம் விரும்பிகள் மற்றும் இசை ஆர்வலர்கள், ஆதரவாக இருந்தவர்கள் அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை, வெவ்வேறு வழிகளில் நம்மை அழைத்துச் செல்கிறது, மோனிக்கா ரிச்சர்ட் மற்றும் நான் நவம்பர் 2020 முதல் பரஸ்பர ஒப்புதலின் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டோம், இனி நாங்கள் கணவன் மனைவி இல்லை. எங்களின் அனைத்து நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் எங்கள் தனியுரிமையை எங்களுக்கு அளித்து, இதில் இருந்து முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதல், அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி -டி.இமான்" என குறிப்பிட்டுள்ளார்.
— D.IMMAN (@immancomposer) December 29, 2021