சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி. இமான்.
2019 ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அளவில் மிக உயர்ந்த சினிமா விருதான தேசிய விருதை விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் பெற்றிருந்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார்.
‘கிருஷ்ணதாசி’ எனும் சன் டிவி சீரியலில் ஏற்கனவே இசைய்மைத்து மெகா சீரியலில் அறிமுகமானவர். மைனா, கும்கி படங்களின் வெற்றி இவரை முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியது.
கடைசியாக அண்ணாத்த, லாபம், எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் - 24 அன்று கணினிப் பொறியாளர் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னை நுங்கம்பாக்கம் கதீட்ரல் தேவாலயத்தில் இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி. இமான் தனது மனைவியை சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்தார். விவாகரத்து குறித்து டி. இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில் "எனது நலம் விரும்பிகள் மற்றும் இசை ஆர்வலர்கள், ஆதரவாக இருந்தவர்கள் அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை, வெவ்வேறு வழிகளில் நம்மை அழைத்துச் செல்கிறது, மோனிக்கா ரிச்சர்ட் மற்றும் நான் நவம்பர் 2020 முதல் பரஸ்பர ஒப்புதலின் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டோம், இனி நாங்கள் கணவன் மனைவி இல்லை. எங்களின் அனைத்து நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் எங்கள் தனியுரிமையை எங்களுக்கு அளித்து, இதில் இருந்து முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதல், அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி -டி.இமான்" என குறிப்பிட்டு இருந்தார்.
இசூழலில் தனது மனைவி மீது இமான் வழக்கு தொடர்ந்துள்ளார். குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்தது என பொய் கூறி புதிய பாஸ்போர்ட் பெற்றதாக முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில், குழந்தைகளை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து , ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 9க்கு ஒத்தி வைத்தார்.