பிரபல குணச்சித்திர நடிகர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டைமில்ல’ படம், தனது ஆரம்பகால ஸ்டண்ட் பயணம், பிகில், பிக் பாஸ் ஆகியவற்றை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
‘மொட்டை ராஜேந்திரன் என்று ரசிகர்களால் அழைப்படும் ராஜேந்திரன், சினிமாவில் ஆரம்பகாலத்தில் ஸ்டண்ட் மேனாக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அதையடுத்து பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான ராஜேந்திரன் தொடர்ந்து, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியின் மூலம் பிரத்யேகமாக பேசிய ராஜேந்திரன் தனது திரை பயணம், அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார். ‘அப்பா, அண்ணன்களின் வழியே குடும்ப தொழிலாக ஸ்டண்ட் செய்து வந்தேன். பின் பாலா சார் மூலம் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு எனது வாழ்வில் கிடைத்தது. பாலா சார் எனக்கு கடவுள் போன்றவர்’ என பேசினார்.
மேலும், ‘ராஜா ராணி’, ‘தெறி’ என அட்லி இயக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ராஜேந்திரன், ‘பிகில்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டர் இருப்பதாகவும், லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் கேரக்டர் எனவும் அட்லி கூறியதாக தெரிவித்தார். அதற்காக I'm Waiting.. என்றும் ராஜேந்திரன் கூறினார்.
ராஜேந்திரனுடன் இணைந்து நடித்த ஜாங்கிரி மதுமிதா தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். அது பற்றிய கேள்விக்கு வெளியில் அதிகம் வேலை இருப்பதால் அங்கு போகவோ, அந்த ஷோவை பார்க்கவோ ‘டைமில்ல’ தலைவா என்று கூறினார். ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்குள் போனால் உடம்பு எல்லாம் புண்ணாகிவிடும் என கூறி முடித்தார்.