கன்னட சினிமாவை வேறொரு உயரத்துக் கொண்டு சென்ற படம் கேஜிஎப். கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் ஓடிடியில் வெளியான போது அதன் ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயர்ந்தது. சமீபத்தைய ஆண்டுகளில் வெளியான சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்றாக கேஜிஎப் இருந்து வருகிறது.
பேன் இந்தியா ஹீரோவான யாஷ்:
யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படத்தை மிகப்பிரம்மாண்டமாக விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார். மும்பை மற்றும் கர்நாடகாவின் அடையாளங்களில் ஒன்றான கோலார் தங்க வயல் பகுதிகளில் நடக்கும் விதமாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. நேர்த்தியான திரைக்கதையாலும், பரபர ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டது இந்த திரைப்படம். எப்படி பாகுபலிக்கு பின்னர் பிரபாஸ் பேன் இந்தியா நடிகராக அறியப்பட்டாரோ அது போல கேஜிஎப் படத்துக்குப் பிறகு யாஷுக்கு இந்தியா சினிமா ரசிகர்கள் மத்தியில் செம்ம க்ரேஸ் கூடியுள்ளது.
கேஜிஎப் 2-வுக்கான எதிர்பார்ப்பு:
இத்தகைய எதிர்பார்ப்புகளோடு 3 வருட காத்திருப்புக்கு பின்னர் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. முந்தைய பாகத்தில் இல்லாத சஞ்சய் தத் இதில் அகிரா என்ற வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திர போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன. இதுவரை படம் சம்மந்தமாக சில போஸ்டர்களும் டீசர் ஒன்றும் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அள்வில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
டிரைலர் ரிலீஸ்:
இந்நிலையில் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தனர். அந்த ஆர்வத்துக்கு இரைபோடும் விதமாக படக்குழு டிரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இன்று டிவிட்டரில் ‘மார்ச் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு டிரைலர் வெளியாகும்’ என அறிவித்துள்ளது. மேலும் டிரைலர் ரிலீஸ் தேதியோடு ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 14 ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
கேஜிஎப் 2 –ல் என்ன எதிர்பார்க்கலாம்:
கேஜிஎப் 1 ஆம் பாகத்தில் வில்லன்களை அழித்து தங்க வயல்களைக் கைப்பற்றி விட்ட யாஷ் அடுத்து தன் சாம்ராஜ்யத்தை நிறுவ என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்பதே இரண்டாம் பாகமாக இருக்கும் என்று முதல் பாக முடிவில் சில காட்சிகளை இணைத்து படக்குழுவினர் சூசகமாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.