‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அறிமுகமானவர் நவீன். அப்படத்தை தொடர்ந்து தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை நவீன் இயக்கி நடித்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை ரிலீஸ் செய்ய ரஜினிகாந்தின் இளைய மருமகன் விசாகனின் மாமா சொர்ணா சேதுராமன் தடைக் கோரியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விசாகனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என பிளாஷ் ஃபிலிம்ஸ் சார்பில் சொர்ணா சேதுராமன் இயக்குநர் நவீனை அனுகியுள்ளார்.
இப்படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி முன்பணமாக தயாரிப்பு தரப்பில் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பணம் வாங்கிவிட்டு படத்தை இயக்கித் தரவில்லை எனவும், அவரது அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை வெளியிடவும் சொர்ணா சேதுராமன் தடைக் கோரியுள்ளார்.
தற்போது இவ்விவகாரம் தொடர்பாக இயக்குநர் நவீன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கொடுக்கப்பட்ட முன்பணம் அனைத்தும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ஷூட்டிங் லொகேஷன் பார்ப்பதற்கும் செலவாகிவிட்டது. பல்வேறு காரணங்களை கூறி படத்தின் ஷூட்டிங்கை தாமதப்படுத்தியது தயாரிப்பு நிறுவனம் தான்.
ஆனால், படத்திற்கு தான் ஸ்கிர்ப்ட் எழுதாமல், பணத்தை செலவு செய்ததாக தன் மீது சொர்ணா சேதுராமன் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கதையை கேட்டதுமே படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டார் விசாகன். எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக சொர்ணா சேதுராமன் அவதூறு பரப்பி வருகிறார். இதனை சட்டப்படி சந்திப்பேன். நீதியே வெல்லும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் கூறும் விதமாக தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமனும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், செக்காகவும், பணமாகவும் படத்தின் முதற்கட்ட பணிகளுக்காக பணம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் செய்த நவீன், அதன்படி நடக்காமல் 10 நாட்களில் அமெரிக்கா சென்றுவிட்டார். தருவாதாக சொன்ன பவுண்ட் ஸ்கிரிப்ட்டையும் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தேன். அதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் தாமதப்படுத்திய நவீன் விரைவில் பணத்தை கொடுப்பதாக வாக்களித்தார். அதையும் நிறைவேற்றாமல் தற்போது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தயாரிப்பாளர்களை ஏமாற்றியதாக நவீன் மீது புகார் இருப்பதை அறிவேன்.
சட்டப்பூர்வமாக தான் எதிர்க்கொள்ளும் இந்த பிரச்னையை அவரும் சட்டப்பூர்வமாக சந்திக்காமல் ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை தான் பரப்பி வருவதாக பிரச்னையை திசை திருப்பி வருகிறார் நவீன் என சொர்ணா சேதுராமன் தெரிவித்துள்ளார்.