மணி ஹீஸ்ட் (Money Heist) என்ற பிரபல ஸ்பானிஷ் வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸில் டாப் டென்னில் பல நாட்களாக இருந்து வருகிறது. இந்தத் தொடரின் மையக் கதை ஸ்பெயினிலுள்ள ராயல் மிண்ட் என்ற மிகப் பெரிய வங்கி கொள்ளையை மையமாக வைத்து புனையப்பட்டது. இந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் "புரொபஸர்", அவர்தான் தன் குழுவினருடன் கொள்ளைக்கான திட்டங்களைத் துல்லியமாக வகுக்கிறார்.
Money Heist இந்தியாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த வெப் தொடரின் இயக்குனர் அலெக்ஸ் ரோட்ரிகோ, சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்தார். அதில் மணி ஹைஸ்ட் தொடரில் தமிழ் நடிகர்கள் நடித்தால் எந்தெந்த கதாபாத்திரத்துக்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். புரொபஸர் ரோலுக்கு தளபதி விஜய்யை அவர் தேர்ந்தெடுத்தது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மிகப் பிரபலமான தொடராக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து வந்த Money Heist திடீரென்று அகற்றப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டரில் இது குறித்த சந்தேகத்தை கேட்டுள்ளார். அதில் அவர், "சில நாட்களுக்கு முன்பு Money Heist பார்க்கத் தொடங்கினேன். ஆனால் நேற்றிரவு அது நெட்ஃபிளிக்ஸில் மறைந்துவிட்டது. காணவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
பல பார்வையாளர்கள் இதைப் பற்றி புகார் செய்ததால், இது காலையிலிருந்து ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஆனால் மீண்டும் இத்தொடர் நெட்ஃபிளிக்ஸில் வந்துவிட்டது. இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது வேறு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Just started with Money Heist a few days ago, it disappeared from last night. What am I missing?? #Netflix
— Ashwin (During Covid 19)🇮🇳 (@ashwinravi99) June 12, 2020