இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சட்டமன்றங்களில் இருந்து மாநிலங்களவைக்கு அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இருப்பினும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்குபவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு சிலரை எம்.பி யாக தேர்ந்தெடுக்கலாம். மாநிலங்களவையில் 12 எம்.பிகள் இப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா
அன்னக்கிளி படத்தின் மூலமாக இசையமைப்பாளராக கால்பதித்த இளையராஜா சாதித்தவை ஏராளம். தனது இசையின் மூலமாக உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா இதுவரை 5 விருதுகளை வென்றிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ள இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இதுவரையில் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ள இளையராஜாவை அவரது ரசிகர்கள் ராகதேவன் என்றும், இசைஞானி என்றும் கொண்டாடி வருகிறார்கள்.
மோடி வாழ்த்து
மாநிலங்களவையின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இளையராஜாவின் மேன்மையான படைப்புகள் தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது. அதேபோல அவரது வாழ்வும் ஊக்கமளிக்க கூடியது. எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து மகத்தான சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் ராஜ்யசபா நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.