மிஸ் சவுத் குயீன், மிஸ் தமிழ்நாடு 2016, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட அழகி போட்டிகளில் பட்டம் வென்ற மாடல் அழகி மீரா மிதுன். இவர் கடந்த 2017ம் ஆண்டு தமிழில் இயக்குநர் சாய் கணேஷ் இயக்கத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்திலும், 2018ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஜூன்.3ம் தேதி ‘மிஸ் தமிழ்நாடு திவா 2019’ என்ற தலைப்பில் அழகிப்போட்டி நடத்த மீரா மிதுன் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, இந்த போட்டியை நடத்தவிடாமல் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷ்னர் அலுவலகத்தில் மீரா புகார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, செய்தியாளர்களை நேற்று (ஜூன்.3) சந்தித்த மீரா மிதுன், சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மிஸ் தமிழ்நாடு திவா 2019’ அழகிப்போட்டியை நடத்தக் கூடாது என எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிகழ்ச்சிக்கு சில மணிநேரங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தடுத்ததாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீரா, 'சட்டப்படி முறையாக ஒரு நிகழ்ச்சியை எடுத்து நடத்த முயன்றதற்கு கடந்த சில நாட்களாக மிரட்டல்களுக்கு ஆளாகி வருகிறேன். எனக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டதாக கூறுகிறார்கள், உண்மையில் அப்படி ஏதும் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், எனது சாதனைகள் எதையும் தடுத்துவிட முடியாது. தமிழ் பெண்களுக்கு ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இதனை செய்து வருகிறேன்'.
'இந்த அழகிப்போட்டிக்காக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 11 மாடல் அழகிகளை தேர்ந்தெடுத்து, சர்வதேச அளவில் க்ரூமிங், காஸ்டியூம், கேட் வாக் போன்றவற்றை செய்து வைத்திருக்கும் நிலையில், போட்டியை நடத்தக் கூடாது என சிலர் அரசியல் செய்து வருகின்றனர்'.
'எது எப்படியானாலும், இன்னும் பிரம்மாண்டமாக இம்மாததிற்குள் இந்த போட்டியை பெரியளவில் நடத்திக் காட்டுவேன். நான் எடுத்து செய்வதில் பிரச்சனையா அல்லது ஒரு பெண் இதனை எடுத்து நடத்துகிறாளே என்ற பிரச்சனையா என்பது புரியவில்லை' எனவும் அவர் கூறியுள்ளார்.