தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது.
சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. இளைஞர்கள் முதல் பெரியோர் வரை அத்தனை சாரரையும் கவரும்படியான பல பிரத்தியேக, புதிய மற்றும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவி, அடுத்ததாக மொழிக்கு முக்கியத்துவம் தரும் பிரபல நிகழ்ச்சியினை மீண்டும் ஒளிபரப்பு செய்யவுள்ளது.
ஆம், விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான, ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி திரும்பவும் ஒளிபரப்பாகவுள்ளது. பிரபல முன்னணி தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் தமிழ் மொழி போட்டி நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சியின் நோக்கம் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 'தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பானது.
இந்நிலையில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வரும் கலைஞருமான மு.கருணாநிதியின் மகனார். மறைந்த கலைஞர் கருணாநிதி தமிழ் மொழியை திரைப்படங்கள் வாயிலாகவும், தமது எழுத்துக்கள் வாயிலாகவும் வளர்க்க பங்களிப்பு செய்தவர். பல புலவர்களுக்கும், மூத்த தமிழறிஞர்களுக்கும் மரியாதை செய்யும் விதமாக பல செயல்திட்டங்களை செய்தவர். தமிழை செம்மொழியாக்க பங்களிப்பு செய்ததுடன், கலைஞர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ்மொழியே பாடல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மூச்சாய் இன்றளவும் திகழ்கிறது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள தமிழுக்கு மரியாதை செய்யும் ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சிக்கு தமது தந்தை கலைஞர் கருணாநிதி வழியில் வாழ்த்துரை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்படி விஜய் டிவி ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் வாழ்த்துரை பேசியுள்ள தமிழக முதலமைச்சர், “உயிர் திரையில் தமிழ்ச் சுடரை ஏற்றி வைப்போம். எந்நாளும் தமிழோடு நாம் ஒளிர்வோம். தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்வோம். தமிழ் பேசி தமிழ் பேசி பெருமை கொள்வோம். தமிழ் போல் மொழி இல்லை. தமிழின்றி நாம் இல்லை. தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பாராட்டும் முதல்வருக்கு நன்றி 🙏 @mkstalin
தமிழ் போல் மொழி இல்லை..
தமிழின்றி நாம் இல்லை..
தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு ♥️ விரைவில்.. உங்கள் விஜயில்.. #ThamizhPechuEngalMoochu #TPEM pic.twitter.com/anQX1IHyZw
— Vijay Television (@vijaytelevision) March 22, 2023