சென்னை: பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைந்த செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உடனே வந்தார்.
பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
விக்ரம் படம்
விக்ரம் நடித்த தில் படத்தில் கண்ணுக்குள்ள கெளுத்தி, தூள் படத்தில் அருவா மீசை, திருப்பாச்சி படத்தில் கட்டு கட்டு கீர கட்டு, ரன் படத்தில் தேரடி வீதியில் தேவதை வந்தால் போன்ற பல பாடல்களை பாடி பிரபலமானார். இதுவரை தமிழில் இவர் 200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
மறைவு
இவரது பாடல்களில் மட்டுமல்லாமல், இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றி பெற்றது. 2003ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தார். சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருந்தார். கடந்த சில நாட்களாகவே உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மாணிக்க விநாயகம், நேற்று மாலை காலமானார். இவரது மறைவு செய்தி சினிமா பிரபலங்களையும், ரசிகர்களை மட்டுமல்லாமல் பல அரசியல் தலைவர்களையும் பேர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முதலமைச்சர் நேரில் அஞ்சலி
பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் ஆளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல திரைப்படப் பாடகர் திரு.வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட பலரும் மாணிக்க விநாயகம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.