இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மீது நுழைவு வரி விலக்கு கோரி, விஜய் தொடர்ந்த மனுவுக்கு அவருக்கு முன்னதாக அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் இப்படியான கோரிக்கைக்காக, நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. மேலும், வரி கட்டுவது கட்டாயம் என்றும் உச்ச நட்சத்திரங்கள் ரியல் வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.
2011-12 ஆம் ஆண்டில் இந்த சொகுசு காரை, விஜய் வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் இந்த மனுவை விசாரித்து, இத்தகைய உத்தரவை பிறப்பித்திருந்தார். இதற்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஏற்றது. அத்துடன், தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, மேல் முறையீட்டு விசாரணைக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு விளக்கம் அளித்தது. குறிப்பாக, நீதிமன்றத்தை நாடியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பு வாதிட்டது.
இதனை அடுத்து, நடிகர் விஜய்க்கு ₨1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.