நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை மரணம் அடைந்தார். திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பாண்டு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ஓவியராகவும், டிசைனராகவும் குறுகிய வட்டத்தில் அறியப்படுபவர்.
இதுகுறித்து Behindwoods-ல் முன்னதாக பாண்டு நலமாக கொடுத்த பேட்டியில், “டாக்டரேட் பி.எச்.டி படித்த ஆர்டிஸ்ட். மெட்ராஸில் படித்தேன். 1967வது வருசம் எம்ஜிஆரை முதன் முதலில் சந்தித்தேன். அப்போது என் அண்ணனும் நடிகருமான இடிச்சபுளி செல்வராஜ் எம்ஜிஆரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துவந்தார். அப்போது குமரிக்கோட்டம் திரைப்பட ஷூட்டிங் நடந்தது. அப்படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார். அந்த படத்தில் எங்கே அவள் என்றே மனம் பாடலில் எம்ஜிஆர் பாடிக்கொண்டே படம் வரைவார். அவரை அந்த பாடல் முடியும் வரை ஜெயலலிதா தேடுவார். பாடல் முடியும்போது எம்ஜிஆர் இருக்க மாட்டார். ஓவியம் மட்டுமே இருக்கும். அது நான் வரைந்த ஓவியம்.
எம்ஜிஆர் செல்வராஜ் தம்பிக்கே அந்த ஓவியம் வரையும் பணியை கொடுங்க என்று சொல்லி இருந்தார். அந்த படத்தை எம்ஜிஆரிடம் ஜெயலலிதா கேட்க, அது என்னுடையது என்று எம்ஜி ஆர் சொல்ல, நான் அதற்கு பணம் கொடுத்துவிட்டதாக சொல்ல, பின்னர் தயாரிப்பாளர் கோவை செழியன் அந்த ஓவியத்தை ஜெயலலிதா காரில் சென்று வைத்த்விட்டார். பின்னர் 1972-ல் எம்.ஜி.ஆர் புதிய கட்சி தொடங்கியபோது, அவர் என்னை அழைத்து கட்சிக்கு கொடி வரைய சொன்னார். இரவு 10.30 மணிக்கு அமர்ந்து ஒருமணி நேரத்தில் வரைந்த கொடி தான் அது. இதேபோல் தேர்தல் சமயத்தில் சின்னம் வரைய சொன்னார். அப்போது இரட்டை இலை சின்னத்தை வரைந்தேன். அதுமுதல் எம்ஜிஆர் தன் வெற்றிகளை கொண்டாடும் பொருட்டு என் கல்யாணத்தை கூட அவர் செலவில் நடத்தி வைத்தார்.
பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு என்னை குடும்பத்தோடு அழைத்து இரட்டை இலை சின்னம் நான் வரைந்தது என்பதை தாமதமாகவே அறிந்ததாகக் கூறி கௌரவித்து அனுப்பினார். முன்னதாக கல்லூரியில் படிக்கும்போதே தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கான எம்பளம் என வரைந்தேன். அதுதான் இன்றுவரை உள்ளது. பின்னர் சன் டிவி லோகோ வரைந்தேன். ஹிட் அடித்தது. என் உயிர் ஓவியத்துல தான். ஆனால் நான் நடிப்பு, தொழிலோடு சரி, எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட நான் இல்லை.” என குறிப்பிட்டார்.
திரு.பாண்டு அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.(2/2)
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 6, 2021
பாண்டுவின் இறப்பு குறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.