நடிகை, மாடல், பிக்பாஸ் பிரபலம் என பன்முகம் கொண்ட மீரா மிதுன் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் மீரா மிதுன் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவுகளை தொடர்ந்து, அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு தொடர்ந்த வழக்கின் பேரிலும், பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் பலரும் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் மீரா மிதுன் மீது அமைதியை சீர்குலைத்தல், சாதி அல்லது மத ரீதியான சர்ச்சைக்குரிய பேச்சால் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே கேரளாவுக்கு வெகேஷனில் சென்றுவிட்ட மீரா மிதுன், தற்போது தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறார். அவ்வாறு அழைத்து வரப்படும் பொழுது, மீரா மிதுன், “போலீசார் என் கையை உடைத்து விட்டனர்.. எனக்கு ஒரு நாள் முழுக்க சாப்பாடு தரவில்லை.. தொடர்ச்சியாக என்னுடைய திரைப்படங்கள் வெளியாகின்றன. அதனால் பலர் என் மீது அதிருப்தியில் உள்ளனர். அதனால் இப்படி எல்லாம் செய்ய தூண்டுகின்றனர்” என்று பேசிக்கொண்டே வருகிறார்.
இதனிடையே மீரா மிதுன், போலீசார் தன் மீது கை வைத்தால் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்வதாகவும் உருக்கமாகப் பேசி, “ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் நடப்பதா? போலீசார் என்னை துன்புறுத்த முயற்சி செய்கின்றனர்” என்று சொல்லி வீடியோ பதிவிட்டு, தமிழக முதல்வரிடம் கூட உதவி கேட்டிருந்தார்.
தற்போது மீரா மிதுன் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் மீது 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.