விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் அர்த்தம் குறித்து பாடலாசிரியர் விவேக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். 'வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே" வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடலில் உள்ள ரஞ்சிதம் என்பதன் பொருள் குறித்து பாடலாசிரியர் விவேக் பிரத்தியேகமாக பகிர்ந்து இருக்கிறார்.
ரஞ்சிதமே என்றால் என்ன அர்த்தம் என்று இந்த நேர்காணலில் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த பாடல் ஆசிரியர் விவேக், "ரஞ்சிதமே என்றால் இனிமையானது என்று பொருள். மலர் என்று பொருள்படுகிறது. மனோரஞ்சிதம் என்று ஒரு பூ இருக்கிறது. வாசனையானது என்கிற ஒரு பொருள் இருக்கிறது. ஒரு பெண்ணை குறிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வரி ஒரு கிராமிய பாடலுடன் பொருந்தி வருகிறது. அந்த அளவுக்கு ஒரு கிராமிய மெட்டுக்கு ஏற்ற வார்த்தையாக இல்லை என்றாலும் கூட, கேட்கும் பொழுது அவ்வளவு சுகமாக, அழகாக பொருந்தி இந்த வரிகள் இந்த பாடலில் உட்கார்ந்தது." என்று கூறுகிறார்.
ஏற்கனவே தளபதி விஜய்க்கு சர்கார் திரைப்படத்தின் விவேக் எழுதிய சிம்டாங்காரன் திரைப்பட பாடல் பிரபலமான பாடலாகவும் ஹிட்டான பாடலாகவும் அமைந்தது.
சிம்டாங்காரன் என்றால் கண் சிமிட்டாமல் பார்த்து ரசிக்க மனம் விரும்பக்கூடிய ஒருவன் என்கிற அர்த்தம். இந்த நிலையில் தற்போது ரஞ்சிதமே என்கிற மற்றும் ஒரு ஹிட் பாடலை விஜய்க்கு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.