பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
Images are subject to © copyright to their respective owners.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், மயில்சாமியின் நினைவுகளை நடிகர் தம்பி ராமையா பகிர்ந்து கொண்டார். அதில், "நடிகர் மயில்சாமி மாமாவை நான் சந்தித்தது பெரும்பாக்கியம். அவர் தான் இருக்கக்கூடிய ஒரு இடத்தை மிகவும் உற்சாகமாக்கி விடுவார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவர் நீண்ட பெரும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளாரா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இற்னொரு பக்கம் அவர் எம்ஜிஆர் ரசிகர். அவரை போலவே பலருக்கும் உதவும் உள்ளம் கொண்டவர்.
Images are subject to © copyright to their respective owners.
ஒரு படிப்பறிவில்லாதவர் எப்படி இப்படி ஒரு ஆளுமையாக உயர்ந்தார் என்பது ஆச்சரியம். நன்றாக படித்தவர்கள், கலெக்டர்கள் இருந்தாலும் கூட அந்த இடத்தில் கூட தன்னை கவனிக்க வைத்து விடுவார். அவரை விட அந்த இடத்தில் யாராலும் நகைச்சுவை செய்து விட முடியாது" என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.