பிகிலைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்பட த்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். விஜய்யுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரீயா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
விஜய் நடிப்பில் முன்னர் வெளியான ’பிகில்’ படம் சமீபத்தில் நூறாவது நாள் விழாவைக் கொண்டாடியாது. இது ’தெறி’, ’மெர்சல்’ படத்துக்குப் பிறகு அட்லி இணையும் மூன்றாவது படமாகும். பல தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் ஃபுட்பால் அணியின் கதையை சித்தரிக்கும் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று ’பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் ஷூட்டில் இருந்த நடிகர் விஜய்யை வருமானவரித்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து, விசாரிக்க சம்மன் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாஸ்டர் ஷூட்டிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, விஜய் சென்னை புறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.