பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் மாளவிகா. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சமீபத்தில் அமெரிக்க போலீஸ்காரரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் குறித்த சம்பவத்தை குறிப்பிட்டு, இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுவபம் பற்றி கூறியுள்ளார்.
''அப்போ எனக்கு 14 வயசு. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் என்கிட்ட அவன் அம்மா டீயே குடிக்க விடமாட்டாங்கன்னு சொல்வான், ஏன்னா டீ குடிச்சா தோலோட நிறம் கருப்பாயிடும்ங்கற வித்தியாசமான நம்பிக்கை அவங்ககிட்ட இருந்துச்சு. ஒரு தடவை நான் அவங்க வீட்ல இருக்கறப்ப என் ஃப்ரெண்ட் டீ கேட்டான் அப்ப அவன் அம்மா என்னை கைகாட்டி “டீ குடிச்சா, இவளை மாதிரி நீ கருப்பாயிடுவே”ன்னு சொன்னாங்க. எனக்கு ஷாக் ஆயிடுச்சு.
என் ஃப்ரெண்ட் மகாராஷ்டிராவை சேர்ந்தவன், கோதுமை கலர்ல இருப்பான். நான் மாநிறமான தோல் உடைய மலையாளப் பொண்ணு. அது வரை எனக்கு என்னோட ஸ்கின் கலர் பத்தின எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. ஆனா அவர் அப்படி சொன்னதும் எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு, காரணம் யாரோ ஒருத்தர் என்னோட தோல் நிறத்தைப் பத்தி கமெண்ட் பண்ணது அதுதான் முதல் தடவை.
நம்ம சொந்த சமுதாயத்தில சர்வ சாதாரண இனவெறி, நிறபேதம் எல்லாமே இருக்கு. வட நாட்டுல கருப்பு சருமமுள்ள நபரை ‘காலா’ன்னு சொல்றது ரொம்ப சாதாரணமா எடுத்துக்கப்படுது. தென்னிந்தியர்களுக்கு எதிரா வட இந்தியர்கள் இந்த மாதிரி மேம்போக்கான பாரபட்சமான கருத்து வைச்சிருக்காங்க. கருப்பா இருக்கற இந்தியர்களை காமெடியா ‘மதராஸி’ன்னு சொல்றாங்க. சில விசித்திரமான காரணங்களால இந்த ஜனங்க தென்னிந்தியர்கள் எல்லாமே கருப்பா இருப்பாங்கன்னு நினைக்கிறாங்க.
வடகிழக்கு இந்தியர்கள் ‘சிங்கி’ன்னு அழைக்கப்படறாங்க, எல்லா கறுப்பின மக்களையும் சர்வ சாதாரணமாக ‘நீக்ரோக்கள்’ன்னு சொல்லிடறாங்க, வெள்ளையா இருக்கறவங்க அழகு, கருப்பா இருக்கறவங்க அசிங்கம்னு நினைக்கற போக்கு இந்த சமூதாயத்துல எப்பவும் இருக்கு.
உலகம் முழுக்க இருக்கற இப்படிப்பட்ட இனவெறி பத்தி நாம பேசும்போது, நம்மளைச் சுத்தி, நம் வீடுகள்லேயும், நம்ம நட்பு வட்டத்திலேயும், நம்ம சமுதாயத்திலும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். இது பத்தின விழிப்புணர்வோட வெளிப்படையாவும், ரொம்ப நுட்பமாவும் இனவெறியையும் நிறபேதத்தையும் முறியடிக்க நம்மளோட பங்கை நாம செய்யணும். தினசரி வாழ்க்கையில உங்கள அழகாக்கறது உங்க சருமத்தோட நிறம் இல்லை - எந்தளவுக்கு நீங்க அன்பா, கனிவா, நல்லவரா இருக்கீங்களோ அதான் அழகு
’
இவ்வாறு மாளவிகா மோகனன் தனது ஆழமான கருத்தை பதிவிட்டுள்ளார். இது இணையவாசிகளிடையே பெரும் வரபேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது,