ஸ்பைடர்மேன், பேட்மேன், ஐயர்ன் மேன், உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களுக்கு தனித்துவமான கதையாக ஒரு படமோ, அல்லது அதற்கு அடுத்தடுத்த பாகங்களோ வெளியாகும். மார்வெல் ஸ்டுடியோவின் மொத்த சூப்பர் ஹீரோக்களின் குவியலாக `அவெஞ்சர்ஸ்' படம் வெளியானது. போலவே டி.ஸி.காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களின் மொத்தக் குவியலாக `ஜஸ்டிஸ் லீக்' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விரண்டு நிறுவனங்களும் அவரவர் பங்குக்கு வொன்டர் வுமன் 1984 மற்றும் ப்ளாக் விடோவையும் 2020-ம் ஆண்டில் வெளியிடவிருந்தனர்.
ஆனால் மார்வெல் ஸ்டுடியோஸின் அதிரடி ஸ்பை திரில்லரான பிளாக் விடோவின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் பிரச்சனையால் மே மாதத்திலிருந்து இந்த ஆண்டு நவம்பர் வரை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் மார்வெல் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.
ப்ளாக் விடோவில் ஸ்கார்லெட் ஜோஹன்சனின் நடாஷா கதாபாத்திரத்துக்கு மார்வெல் வரிசையில் வந்துள்ள கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் மற்றும் அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் ஆகியவைதான் பின்னணிக் கதைகள்.
இந்நிலையில் மார்வெல் ஸ்டுடியோஸின் தலைவர் கெவின் ஃபைஜ் ப்ளாக் விடோ பற்றி ஒரு நேர்காணலில் கூறியது: “நடாஷாவுக்கு ஒரு பணக்கார பின்னணி உள்ளது…ஆனால் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு இந்த காரெக்டரை உருவாக்கி உள்ளோம். மற்ற படங்களில் பார்த்ததை விட, ரசிகர்களுக்கு இந்த Black widow நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கும்’’ என்று கூறினார்.