சென்னை : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை திவ்யா கணேஷ்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலின் முதன்மை கேரக்டரான பாக்யாவின் மருமகளாகவும், செழியனின் மனைவியாகவும் வரும் ஜெனி கேரக்டர், குடும்ப பொறுப்புகளையும், தனது மாமியார் பாக்யாவின் கஷ்டங்களையும் உணர்ந்து நடப்பதுடன், இல்லத்தின் மூத்த மனிதர்களிடம் கனிவுடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ளுமாறு உருவாக்கப்பட்டிருக்கும். முன்னதாக பாக்யாவின் மகளான இனியாவின் பருவவயது மனத்தடுமாற்றங்களை ஜெனி கண்டித்து வழிநடத்தி முற்பட்டதால் இனியாவுக்கும் ஜெனிக்கும் இடையில் உரசல் இருந்தது.
பாக்கியலட்சுமியின் போராட்டம்
இதேபோல் தாயின் கஷ்டத்தை உணராத செழியனுக்கும், அவனது மனைவி ஜெனிக்கும் ஆகவே ஆகாது என்கிற சூழல் இருந்தது, தற்போது அனைத்தும் சரியாகியுள்ளது. இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை திருமணம் செய்துகொள்ள, அமிர்தா தன் குழந்தையுடன் பாக்யாவின் வீட்டுக்கு மருமகளாக வந்துவிட்டார். இவர்களுக்கு ஜெனியின் முழு சப்போர்ட் உள்ளது. அதே சமயம், தன்னை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபியிடம் வீட்டுக்கான பணத்தை, பாக்யா தனது கேட்டரிங் தொழில் மூலமாக ஒருபுறம் அடைக்க, இன்னொருபுறம் அதற்கு ராதிகா கம்பெனியில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்.
மாமியாருக்கு துணை நிற்கும் ஜெனி
ஆனால் எதுநடந்தாலும் கொழுந்தன் எழிலுக்கும், எழில் மனைவி அமிர்தாவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் ஜெனி, அமிர்தாவின் குழந்தை நிலாவுடன் இணக்கமாக இருக்கிறார். பாக்கியலட்சுமிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன், அவரை அவ்வப்போது அழகு , உரிமை, ஆளுமை, ஆங்கிலம், கணக்குவழக்கு உள்ளிட்ட பல விசயங்களில் மோட்டிவேட் செய்தும், உதவி செய்தும் வருகிறார். தன் கணவர் செழியனிடமும் ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும்போதும் அவனது பொறுப்பின்மையை சுட்டிக்காட்ட தவறமாட்டார். எழிலையும் பாக்யாவையும் பற்றி புரியவைப்பார். இந்த கேரக்டரில் நடித்துவருபவர் தான் நடிகை திவ்யா கணேஷ்.
ஜெனியாக நடிகை திவ்யா கணேஷ்
இவர் தற்போது பிஹைண்ட்வுட்ஸில் பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். இதில், “கோபி போன்ற ஒரு மாமனார் உங்களுக்கு வாய்த்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திவ்யா கணேஷ், “நிச்சயமாக ஜெனி கேரக்டரில் இல்லாமல் நான் திவ்யா கணேஷாக நடந்து கொண்டால் கோபியை இரண்டில் ஒன்று கேட்பேன். அதே சமயம் அவர் திருமணம் செய்து கொண்டது உள்ளிட்ட விஷயங்கள் அவருடைய பர்சனலாக இருக்கலாம் என்பதால் என்னுடைய மாமியாருக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் செய்ய முடியுமோ பண்ணுவேன். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். அதே சமயம் அவர்களுக்கு நேரும் அவமானங்களின் போது நான் நிச்சயமாக உரக்க பேசுவேன். கேள்விகள் கேட்பேன். ஆனால் எனக்கு கோபி மாதிரி மாமனார் எல்லாம் வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.
இதேபோல் திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பேசிய திவ்யா கணேஷிடம் வருங்கால கணவர் குரித்த எதிர்பார்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திவ்யா கணேஷ், “இயல்பாகவே நாம் எதிர்பார்க்கும்படி எல்லாம் யாரும் இருக்க மாட்டார்கள். உண்மைதானே .. நான் நினைப்பது போன்று எல்லாம் நடக்காது. எனவே கடைசி வரை கூட இருந்தால் மட்டுமே போதுமானது” என்று தன்னலான சிறிய கோரிக்கையை ஜாலியாக முன் வைத்தார்.
தொடர்ந்து பேசியவர், “இப்போது எல்லாம் நிறைய பார்க்கிறோம். பலரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் விட்டுச்சென்று விடுகின்றனர். உடன் இருப்பதில்லை. அப்படியான ரிலேஷன்ஷிப் எதற்கு வருகிறது, எதற்கு போகிறது (புட்டுக்கிறது) என்பதே தெரியவில்லை. அப்படி எல்லாம் ஆகிவிடக்கூடாது. கடைசி வரை உடன் இருக்க வேண்டும் என்பதே போதுமானது” என்று பேசினார்.