திரைத்துறையில் தொடர்ந்து அடுத்தடுத்து கலைஞர்கள் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் திரைத்துறை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் தாமிரா மரணமடைந்த செய்தி என வந்த செய்திகள் இன்னும் அதிர்ச்சி அளித்தன.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் மரணம் அடைந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் நேற்று மாலை மரணம் அடைந்த மாரி செல்லதுரை பற்றிய செய்தியும் வந்தது.
தனுஷின் மாரி திரைப்படம் மற்றும் விஜய் நடித்த தெறி திரைப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மாரி செல்லதுரை அறம் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். நேற்று மாலை இயற்கை மரணம் அடைந்த இவருடைய மறைவு குறித்தும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது நட்பே துணை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மாரி செல்லதுரை ஐயாவுடன் நடந்த நெருக்கமான நிகழ்வு ஒன்றை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார் அப்படத்தின் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
இது குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள அவர், “நட்பே துணை படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் தாத்தாவுடன் மகிழ்ந்து இருந்தோம். தான் இருக்கும் வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பு முடிந்து பின்னிரவில் நாங்கள் சிங்கிள் பசங்க பாடலுக்கு ஷூட் செய்தோம். அவர் முழு ஆற்றலுடன் இருந்தார். நடிப்பதில் அர்ப்பணிப்புடன் இருந்தார். ஆன்ம நலம் பெறுங்கள் செல்லத்துரை தாத்தா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ALSO READ: தெறி.. மாரி.. அறம் திரைப்படங்களில் நடித்த 'மாரி' செல்லதுரை திடீர் மரணம்.. நடந்தது என்ன?