நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது அதிகாலையில் கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவரை மருத்துவமனை அழைத்து சென்ற சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது மறைவு பலரை வாட்டியும் வருகிறது.
சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இல்லை என்ற சூழலிலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் இல்லாத மயில்சாமியின் மறைவு பற்றி பலரும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக நடிகர் மயில்சாமி குறித்து நிறைய விஷயங்களை உருக்கத்துடன் நடிகர் மனோபாலா பகிர்ந்து கொண்டார்.
அதேபோல சமூக உணர்வு அதிகம் உள்ள நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் உயிரிழந்தது எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, "ரெண்டு பேருமே அவ்வளவு சமூகப் பார்வை உள்ளவங்க. இரண்டு பேருமே இப்படி பட்டு பட்டுன்னு சொல்லாம கொள்ளாம கிளம்புவாங்கன்னு தெரியல. அவ்ளோ மனசுக்கு வேதனை. இன்னும் நான் அழுதுகிட்டே இருக்கேன். என்னால தாங்கிக்க முடியல. என்னுடைய எத்தனையோ உறவுக்காரங்க இறந்திருக்காங்க, எனக்கு அழுகையே வராது.
Images are subject to © copyright to their respective owners
ஆனா சினிமாக்காரங்க யார் இறந்தாலும் முதல் ஆளா நான் போய் நிற்பேன். அத விட்டுக் கொடுக்கக் கூடாதுல்ல. அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு ஆறுதலா இருக்கணும். ஒரு கைய புடிச்சா கூட தைரியம் வர்ற மனப்பக்குவம் இருக்கணும். அதை நான் செஞ்சிட்டு இருக்கேன். அதை எனக்கு சொல்லிக் கொடுத்தது விவேக் தான். விவேக் இறந்த போதும் நான் அதை பண்ணேன், இப்ப மயில்சாமி இறந்த போதும் அப்படி தான் நான் பண்ணேன்" என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.