பெங்காலி நடிகை பிதிஷா டி மஜூம்தார் மறைவுக்கு பிறகு, அவரது தோழியும், நடிகையுமான மஞ்சுஷா நியோகியும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாடலாக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை பிதிசா டி மஜூம்தார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, கொல்கத்தா பகுதியிலுள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாடகைக்கு தங்கி வந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கிய படி உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், பிதிஷாவின் வீட்டிற்கு வந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அவரது வீட்டிலும் ஆய்வு செய்து வந்தனர். அப்போது, கடிதம் ஒன்று சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
தோழிக்கு நேர்ந்த முடிவு..
பிதிஷாவின் முடிவு, பெங்காலி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், மாடல் மற்றும் நடிகையும், பிதிஷாவின் தோழியுமான மஞ்சுஷா நியோகியும் உயிரிழந்து போன சம்பவம், மீண்டும் பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.
கொல்கத்தாவில் அமைந்துள்ள மஞ்சுஷாவின் வீட்டிலேயே அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோழி பிதிஷாவின் மரணத்தால் அதிக மன அழுத்தத்துடன் மஞ்சுஷா காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கண்ணீரில் தாய்..
இதுகுறித்து, மஞ்சுஷாவின் தாயார் பேசுகையில், "நெருங்கிய தோழியான பிதிஷாவின் மறைவுக்கு பிறகு, எனது மகள் மஞ்சுஷா அதிக மன உளைச்சலில் இருந்தார். எப்போதும் பிதிஷாவை பற்றி தான் பேசிக் கொண்டே இருந்தார். பிதிஷாவின் வீட்டில் மீடியா சூழ்ந்து இருப்பது போல, நமது வீட்டிலும் நடக்கும் என மகள் கூறிய போது, நான் அவரை திட்டினேன். ஆனால், இப்போது அதே போல நடந்துள்ளது" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், பெங்காலி டிவி நடிகை பல்லவியின் மறைவு, பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றே நாட்களில் இரண்டு பெங்காலி நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.