நடிகை மனீஷா கொய்ராலா, தமிழ் சினிமாவில் பம்பாய், உயிரே, முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இந்திய நடிகை.
கடந்த 2012-ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தா நடிகை மனீஷா கொய்ராலா. பின்னர் அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு குணமடைந்தார். இதனையடுத்து தன் அனுபவங்களை தொகுத்து ஹீல்ட்: ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப் என்கிற புத்தகமாக எழுதி, கடந்த ஜனவரி 8, 2018 அன்று வெளியிட்டார்.
அந்த புத்தகத்தில், நடிகை மனீஷா கொய்ராலா தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் நலம்பெற்று வருவது குறித்து எழுதியிருந்தார். இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனீஷா கொய்ராலா உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளன்று புற்றுநோயினாலான கடினமான பாதையில் இந்த பயணத்தை கடந்து செல்லக்கூடிய அனைவரையுமே நான் வாழ்த்த விரும்புகிறேன். எனக்குத் தெரியும் இந்த பயணம் கடினமானது என்று.. ஆனால் நீங்கள் அதை விட வலிமையானவர். இந்த பயணத்துக்கு துணிந்தவர்களுக்கு நான் மரியாதையை செலுத்தவும், இதில் வென்று வருபவர்களுடன் இணைந்து இப்பயணத்தை கொண்டாடவும் விரும்புகிறேன்.
இந்நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் முன்னெடுத்துச் சென்று அனைவரிடத்திலும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு நாம், நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நமக்கும் இவ்வுலகிற்கும் நாம் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்துக்காகவும், நலமான வாழ்க்கைக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என மனீஷா கொய்ராலா குறிப்பிட்டுள்ளார்.