அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், 50 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் சாத்தியப்படாமல் இருந்து. தற்போது பொன்னியின் செல்வன் நாவலை திரையில் கொண்டுவந்தபோது அதை மேலும் கடினமாக்கிய விஷயம் எது என்பது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்ட இயக்குநர் மணிரத்னம், “சந்தேகத்துக்கு இடமின்றி கோவிட் -19 பெரிய சிக்கலாக இருந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததுமே லாக்டவுன் வர, சுமார் 9 மாதங்களாக காத்திருக்கிறோம்.
அந்த நேரத்தில் நாங்கள் எங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால் அதை தாண்டிய பொறுப்பாக ஃபிட்னஸ் இருந்தது. இளவரசரோ, குந்தவையோ ஸ்லிம்மாக ட்ரிம்மாக இருக்க வேண்டும். அவ்வபோது போன் செய்து ஜிம் இல்லை என்ன பண்றீங்க.. என கேட்டுக்கொள்ளும் பொறுப்பு இருந்தது. ஷூட்டிங், லொகேஷனுக்கான பிளானிங் மற்றும் மாற்று யோசனைகளை ரெடி பண்ணி வைத்துக் கொண்டிருந்தோம்.” என்றார்.