எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்தினம், படம் குறித்து பேசும் பொழுது, நடிகர் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக பேசிய அவர், “நடிகர் சிரஞ்சீவிக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.. ஏன் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். அது ஏன் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகிறேன். இன்னொரு நன்றியை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு என்ன காரணம் என்பதை நான் கூறுகிறேன்.
அவருடைய திரைப்படங்கள்தான் இப்படியான திரைப்படங்கள் இயக்குவதற்கான கதவை திறந்து விட்டிருக்கின்றன. இந்த வகையான திரைப்படங்களை வெற்றிகரமாக இரண்டு பாகங்களாக எடுக்க முடியும், அவற்றை வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை அவர் காட்டியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் இப்போது சாத்தியமானதற்கும் இரண்டு பாகங்களாக உருவாகியதற்கும் அவர் முக்கியமான காரணம் எனவே அவருக்கு நன்றி!” என்று தெரிவித்திருக்கிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதன் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” திரைப்படம் வரும் 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வருகிறது.