மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் படபிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் பிரமாண்ட சரித்திர படைப்பு பொன்னியின் செல்வன்.
இந்த படத்தின் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது.
பல தலைமுறகளாக ஏகோபித்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர்.
பலரும் இதை படமாக்க நினைத்து முடியாமல் போன நிலையில், இயக்குநர் மணிரத்னம் இந்த சவாலான சரித்திரக் கதையை படமாக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்றதும் , பட ரிலீஸ்க்கு முன்னதாக நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்கிற ஆவலில் உலகம் முழுக்க பலர் இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
“இப்படி ஒரு படம் இனிமே அமையாது.. அதை எடுக்கவும் முடியாது.. அதற்கு வாய்ப்பே இல்லை.. இதை மணிரத்னம் தான் செய்ய முடிந்தது.. படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம்..” என்று இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருமே சொல்லி வருவது மேலும் வியப்பை தருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் தமது காட்சிகளை ஜெயம் ரவி நடித்து முடித்திருந்தார்.
அதன் பின் ஜெயம் ரவியும் கார்த்தியும் ட்விட்டரில் பேசிக்கொண்டதை வைத்து இளவரசராக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிப்பது உறுதியானது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்துக்கு இசை அமைத்து வருகிறார். தோட்டாதரணி கலை இயக்குனராகவும், ரவிவர்மன் ISC ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றும் இந்த திரைப்படம் வரும் 2022-ஆம் ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளதாக தற்போது வெளியாகியிருக்கும் புதிய போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.