தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான நடிகர் சூரி தன்னுடைய இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட போது, அங்கு நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் நடந்த நடிகர் சூரியின் சகோதரர் வீட்டு திருமண விழாவில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து, அங்கிருந்த சுமார் 10 சவரன் நகையை களவாடி கைவரிசையை காட்டி இருக்கிறார்.
இதனை அடுத்து சூரியின் தரப்பில் இருந்து சூர்யபிரகாஷ் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை வைத்து இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பரமக்குடியை சேர்ந்த நகைக்கடை அதிபரின் மகனான விக்னேஸ்வரன் என்பவரை தங்களுடைய விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். எல்லா சிசிடிவிகளிலும் விக்னேஸ்வரனின் முகம் பதிவானதுடன், 24 மணி நேரத்துக்குள் அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், தான் ஒரு சுய விளம்பரத்துக்காக, அதாவது பப்ளிசிட்டிக்காக பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் புகுந்து திருடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெள்ளை சட்டையில் செல்வதால் அறிமுகமில்லாதவர்கள் கூட, விக்னேஸ்வரனை விஐபி என நினைத்து, இயல்பாக பேசி வரவேற்பதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஸ்வரன், ஏற்கனவே இதேபோல் காவல் அதிகாரி ஒருவர் வீட்டில் இருந்து திருடி, சிக்கிக் கொண்டிருக்கிறார். இவர் மீது பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சூரியின் இல்ல திருமண விழாவில், சூரி உட்பட அங்கிருந்தவர்களிடம் “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டு கைகுலுக்கி சிரித்துப் பேசி திருமணத்துக்குள் நுழைந்திருக்கிறார். இப்படித்தான் மணமகள் அறையில் புகுந்து நகைகளை அவர் களவாண்டிருப்பதாக தெரிகிறது.
விக்னேஸ்வரன் தந்தை மணிவாசகரும் இதுகுறித்து பேசும்போது, பத்திரிகையிலும், டிவி சேனல்களிலும் தனது பெயர் வரவேண்டும் என்கிற விளம்பர மோகத்தால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் விக்னேஸ்வரன், சில சமயம் வெளியூரில் இருந்துகொண்டு தன்னை காணவில்லை என புகார் அளிக்குமாறு வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.