நேற்று (28.06.2022 நடிகர் ‘பூ’ ராமு உடல்நலக் குறைவால் சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலமாகினார்.
இயக்குனர் சசி இயக்கிய பூ திரைப்படத்தில் நாயகன் ஸ்ரீகாந்த்தின் தந்தையாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ராமு. இதனால் இவர் பூ ராமு என அழைக்கப்பட்டார்.
நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூ ராமு, தமிழ் சினிமாவில் குணச்சித்ர நடிகராக வலம் வந்தார். குறிப்பாக சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்திருந்தார்.
பூ ராமுவின் மறைவுக்கு சினிமாகாரர்களும் இலக்கியவாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மம்முட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' பட BTS போட்டோவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
லிஜோ, தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கியுள்ளார். வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.