பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா சென்ற கார் விபத்தை சந்தித்திருக்கிறது, இந்நிலையில் சிறிய காயங்களோடு அவர் தப்பியதாகவும், மருத்துவமனையில் இருந்து தற்போது அவர் வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலைக்கா அரோரா
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலைக்கா அரோரா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த 'காண்டே' படத்தின் மூலமாக நடிகையாக பரவலாக அறியப்பட்டவர். நடனத்திலும் சிறந்து விளங்கும் அரோரா அதற்கு முன்பே உயிரே படத்தில் 'தையா தையா' பாடலில் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடி புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நேற்று எக்ஸ்பிரஸ்வே பகுதியில் சென்றுகொண்டிருந்த போது 3 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளன. இவருடைய ரேஞ் ரோவர் கார் இரண்டு வாகனங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் லேசான காயத்துடன் தப்பிய அரோரா அருகில் இருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து பேசியிருந்த அரோராவின் செய்தி தொடர்பாளர்," அவர் (அரோரா) லேசான காயம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார். சில தினங்களுக்கு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார்.
வீடு திரும்பிய அரோரா
இந்நிலையில், அரோரா வீடு திரும்பியுள்ளதாக அவரது சகோதரி அம்ரிதா அரோரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்," மலைக்கா அரோரா தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் குணமாகி வருகிறார். இன்னும் சில தினங்களில் பூரண நலமடைவார்" எனத் தெரிவித்து உள்ளார்.
இந்த விபத்து குறித்து கபோலி பகுதி காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிஷிரிஷ் பவார்," விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம். விரைவில் விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்வோம்" என்றார்.
பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.