தொழில்முறை உறுப்பினர்கள் விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23 ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ், பிரசாந்த், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற மூத்த நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர் பாக்யராஜ் அணியினர்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மொத்தம் 68 போட்டியிடுவதாகவும், வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (ஜூன் 14) மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூன் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை ஐகோர்ட். வழக்கால் தேர்தலுக்கு சிக்கல் வருமோ என்ற கலக்கம் நிலவி வரும் நிலையில், நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்களாக இருந்த 61 பேரை தொழில்முறையற்ற உறுப்பினர்களாக மாற்றியது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் தேர்தல் நடத்துவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.