வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, நவம்பர் 25-ஆம் தேதி நேரடியாக திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் மாநாடு.
சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து கலக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனமும், அந்த வசனங்களை இவர்கள் டெலிவரி செய்த விதமும் திரையரங்கில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படி ஒரு வசனம் தான், “வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு” என்கிற வசனம்.
டைம் லூப் வகையறா படமான மாநாடு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னதாக எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, தான் ஒரு வில்லனாக இந்த படத்தில் நடித்திருந்தாலும் தான் வில்லன் கிடையாது என்றும், எப்போதுமே ஹீரோதான் என்றும் கூறி இருந்தார்.
தற்போதைய காலக்கட்டத்தில் நடிகராக சக்கை போட்டு போட்டு வரும் எஸ்.ஜே.சூர்யா தன் நடிப்புக்கென ரசிகர்களாலும் திரையுலகினராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார். அதற்கு எஸ்.ஜே.சூர்யா நடித்த இறைவி, மான்ஸ்டர், மெர்சல், ஸ்பைடர், நெஞ்சம் மறப்பதில்லை தொடங்கி மாநாடு வரை அவரது அண்மைக்கால படங்களும் காரணமாகியுள்ளன.
இந்நிலையில் சமீப நாட்களாகவே சென்னை உட்பட தமிழகத்தில் வெளுத்து வாங்கும் பருவமழை கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அதில் இருந்து மக்கள் மீண்டு வர, இன்னொருபுறம் மழை விட்டு விட்டு பெய்தும் வருகிறது. மழையும் ஒரு முடிவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை. மழை எப்போது முடியும் என்கிற முடிவுக்கு நாமும் வரமுடியவில்லை.
ஆனால் எல்லாவற்றையும் மீம் போட்டு கொண்டாடும் தற்போதைய தலைமுறை, இந்த மழைக்கும் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் தற்போது மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற எஸ்.ஜே.சூர்யா பேசும் மாஸான வசனமான “வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு” என்கிற வசனம். இதை அப்படியே கொஞ்சம் மாற்றி, “மழை.. பெய்யுது.. நிக்குது.. ரிப்பீட்டு!!” என்று கனமழைக்கான மீம்ஸாக பகிர்ந்து வருகின்றனர்.
இதேபோல், சார்பட்டா பரம்பரை பட காட்சியை வைத்து, மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பின்னணி இசை குறித்து பலரும் உருவாக்கிய மீன் கண்டண்ட்களை நடிகர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் பாசிடிவாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.