சென்னை: மாநாடு படத்தின் 50வது நாளை ஒட்டி தயாரிப்பாளர் முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்க, V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையும், வில்லன்களால் நீதிக்கு துரோகம் செய்து, அழிவுச் செயல்களில் ஈடுபடும்போது, பிரபஞ்ச விதிகள் எப்படி உடைந்து போகின்றன என்பதே மாநாடு கதை. இந்த படம் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மாநாடு படத்தில் சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். மாநாடு படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் முதல் மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநாடு படம் வெளியாகி இன்றுடன் (13.01.2022) 50 நாட்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முகநூலி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில். "தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும்". மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது. 50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது.
இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான்.. வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல.
வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன் TR, இயக்குநர் வெங்கட் பிரபு, ஃபைனான்சியர் திரு. உத்தம் சந்த் அவர்களுக்கும்... அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பண்பலை நண்பர்கள் மற்ற மொழியிலும் இப்படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய் தந்தைக்கும் இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன்".
நன்றி நன்றி நன்றி! - சுரேஷ் காமாட்சி இயக்குநர் / தயாரிப்பாளர். என குறிப்பிட்டுள்ளார். மாநாடு படம் துவக்கத்தில் டிராப் செய்யப்பட்டு, பல தடைகளுக்கு நடுவே உருவானது. மேலும் ரிலீஸ் சமயத்தில் ஏற்பட்ட சிக்கலால் ரிலீசும் தள்ளிப்போனது. ஆனால் பலக்கட்ட முயற்சிகளுக்கு பின் மாநாடு படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது.