சென்னை, 20, பிப்ரவரி 2022: தமிழ் திரைத்துறையில் கடந்த 2 வருடங்களில் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் பலரும் மரணம் அடைந்து வருவதை காணமுடிந்தது. மிகவும் சோகத்தை திரைத்துறையில் ஏற்படுத்திய இந்த துயர சம்பவங்களைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டுக்குள் திரைத்துறை அடி எடுத்து வைத்தது.
தமிழ்த்திரைத்துறையில் பேரிடி
ஆனால், தமிழ்த்திரைத்துறையில் முதல் பேரிடியாக பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் தற்போது மரணம் அடைந்திருக்கும் செய்தி அனைவரையும் கண்கலங்க செய்திருக்கிறது.
பாடலாசிரியர் லலிதானந்த், ஜீவா ஸ்ரேயா நடித்து பிரகாஷ் நிக்கி இசையில் வெளியான ரௌத்திரம் திரைப்படத்தில், ‘அடியே உன் கண்கள்’ எனும் பாடலை எழுதினார். தொடர்ந்து, அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில், ‘அது ஒரு காலம்’ உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களை எழுதியிருந்தார்.
‘என் வீட்டுல நான் இருந்தேனே’..
பின்னர் லலிதானந்த், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் வெளியான, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில், ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ என்கிற பாடலை எழுதினார்.
மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிப் பாடலாக அமைந்த இந்த பாடல் லலிதானந்ததுக்கு நல்ல வெளிச்சத்தை தேடி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா திரைப்படத்தில் லோலிக்கிரியா எனும் பாடலையும், அண்மையில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடித்து வெளியான அன்பிற்கினியாள் திரைப்படத்தில், ‘உன் கூடவே’ பாடலையும் லலிதானந்த் எழுதினார்.
மருத்துவ சிகிச்சை
தொடர்ந்து இயக்குனர் கோகுல் மற்றும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோரது இயக்கங்களில் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படங்களிலும் பாடல் எழுதியிருக்கும் லலிதானந்த், அண்மைக்காலமாக சிறுநீரக பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டயாலாசிஸ் செய்யப்பட்டு குணமாகி வரும் நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாரடைப்பால் மரணம்..
அதன்பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது. மேற்படி மறைந்த பாடலாசிரியர் லலிதானந்த்தின் பிரேதத்தை, திருச்சியில் வசிக்கும் அவரது குடும்பத்தாரிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை அவரது நட்புறவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திரைத்துறையினர் இரங்கல்..
லலிதானந்த் மறைவு குறித்து, நெருங்கிய நண்பர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பலரும் அவருடைய இழப்பை தாங்க முடியாமல் வருத்தங்க்ளை பதிவு செய்து வருகின்றனர். திரையுலக முன்னணி பிரபலங்கள் பலரும் லலிதானந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.