தமிழ் சினிமாவின் மூத்த கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவர் என்று பெயர் பெற்றவருமான நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆர் தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத சக்தியாக நிலை நின்றவர். காலத்தை தாண்டி இன்றும் எம்ஜிஆர் பாடல்கள் உழைப்பாளர்களால் கேட்கப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாதது.
இதற்கு ஒரு முக்கிய காரணம் எம்ஜிஆர் திரைப் படங்களின் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள். அவர்களுள் முக்கியமான பாடலாசிரியர் புலமைப்பித்தன். கவிஞர் புலமைப்பித்தன் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எழுதிய ‘சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்கிற பாடல் மிகவும் பிரபலம்.
பட்டிதொட்டியெல்லாம் பரவி மிகப்பெரிய வெற்றிப் பாடலாக வெகுஜன மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாடல் எம்ஜிஆருக்கு முக்கியமான பாடலாக அமைந்தது. இதேபோல் ‘நான் யார்.. நான் யார்..’ பாடல், ‘ஓடி ஓடி உழைக்கணும்’.. ‘ஆயிரம் நிலவே வா..’ என்கிற பாடல் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்களை புலமைப்பித்தன் எழுதினார்.
எம்ஜிஆர் காலத்தை அடுத்து பல திரைப்பட பாடல்களை எழுதிய புலமைப்பித்தன் வடிவேலு நடித்து வெளியான இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரையிலும் எண்ணற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்.
இந்நிலையில்தான் அடையாறு Fortis மலர் மருத்துவமனையில் புலவர் புலமைப்பித்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அரசவைக் கவிஞராக இருந்த அவருக்கு life Support பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக Fortis மலர் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி, பேரன் திலீபன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் தனி செயலாளர் குணசேகரன் மற்றும் பாடலாசிரியர் மதுரா ஆகியோர் உடனிருக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தன் மீண்டும் எழுந்து வர சக கவிஞர்களும், பாடல் ரசிகர்களும் பிரார்த்தனை செய்வதாக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.