கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'
இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.
கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார்.
கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 4 அன்று இப்படம் வெளியாகிறது.
'லவ் டுடே' திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம்.வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் நடிகர் இயக்குனர் பிரதீப் கலந்து கொண்டார். நெறியாளரின் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக, "படத்தின் பெயர் 'லவ் டுடே' என்பதால் ஏதேனும் அனுமதி வாங்க வேண்டி இருந்ததா?" என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக கேட்கனும்ல R.B சௌத்ரி சார்ட்ட ரைட்ஸ் இருந்தது. இருப்பினும் விஜய் சாரிடமும் கேட்கப்பட்டது. ஏ ஜி எஸ் ஏற்கனவே பிகில் படம் தயாரித்து இருந்ததால் விஜய் சாரை அனுகுவது எளிதாக இருந்தது. விஜய் சாருக்கு குறும் படத்தை அனுப்பி இந்த கதையை தான் லவ் டுடே என எடுக்கப்போகிறோம் என கூறி அனுமதி வாங்கினோம்" என இயக்குனர் பிரதீப் கூறியுள்ளார்.