பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக அறியப்படும் கே.வி.ஆனந்த் தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியவர்.
கே.வி.ஆனந்த் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகி கோ, அயன், அனேகன், மாற்றான், கவண், காப்பான் படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களில் கே.வி.ஆனந்த் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மலர்ந்து இப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் மரணித்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.
இவரது மரணம் இவரைப் போலவே இன்னொரு ஒளிப்பதிவாளரின் வாழ்வுடன் இவருடைய வாழ்வை ஒப்பீடு செய்ய வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அது வேறு யாருமல்ல இயக்குநர் ஜீவா தான். ஜீவா 12 B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம்தூம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் தாம்தூம் படத்தை இயக்கி, அது வெளியாவதற்கு முன்பே மரணம் அடைந்தார்.
இவர்கள் இருவருக்குள்ளும் அப்படி என்ன ஒற்றுமைகள் என்றால் ஏராளம் இருக்கின்றன. அத்தனை துல்லியமாக அவை பொருந்திப் போகின்றன. ஆம், கே.வி.ஆனந்த் , ஜீவா இருவருமே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் ஆஸ்தான சீடர்கள். ஜீவா ஒளிப்பதிவாளராக தமிழில் ஜென்டில்மேன், காதலன், ஆசை, இந்தியன், உல்லாசம், வாலி, குஷி, சினேகிதியே, ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். இவற்றில் சில ஷங்கரின் தொடக்க கால படங்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக தமிழில் காதல் தேசம், நேருக்குநேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றினார். இவற்றிலும் சில படங்கள் இயக்குநர் ஷங்கர் இயக்கியவை.
இருவரும் இயக்குனர் சங்கருடன் ஒளிப்பதிவாளராக தலா 3 படங்கள் பணியாற்றியுள்ளனர். ஆகவே தான் இயக்கிய படங்களின் தலைப்பை சங்கர் படத் தலைப்பு போல் 'ன்' என்று முடிவதுபோல் அமைத்தார் கே.வி.ஆனந்த் (கனா கண்டேன், அயன், அனேகன், மாற்றான், கவண், காப்பான்). வசந்த் இயக்கத்தில் ஜீவா ஆசை படத்திலும், கே.வி. ஆனந்த் நேருக்குநேர் படத்திலும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். வசந்த்தின் சிஷ்யரான எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி, குஷி இரண்டிலும் ஜீவாதான் ஒளிப்பதிவு.
இதில் கே.வி.ஆனந்தின் கனா கண்டேன், கவண் படங்களைத் தவிர, கே.வி.ஆனந்த், ஜீவா இருவரும் இயக்கிய அனைத்து படங்களுக்கும் பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்துள்ளார். அனைத்து படங்களிலும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகின. ஹாரிஸ் ஜெயராஜின் இசைப் பயணத்தில் இந்த ஒளி ஓவியர்கள் இயக்கிய படங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.