லோகேஷ் கனகராஜ் மம்மூட்டி & மோகன்லால் வைத்து படம் இயக்குவது குறித்து மனம் திறந்துள்ளார்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கி உள்ளார். ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
தமிழ் மட்டும் அல்லாமல் மலையாள மொழியிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது "மலையாளத்தில் மோகன்லால் - மம்மூட்டி உடன் படம் செய்வீர்களா? என கேட்ட கேள்விக்கு, "மோகன்லால் - மம்மூட்டி உடன் படம் பண்ணுவது பெரிய பாக்கியம் எனவும், தற்போது மலையாளத்திலோ, தெரியாத வேற்று மொழிகளில் இன்னொருவரை சார்ந்து படம் செய்வது சரியாக இருக்காது , மொழிகளை கற்றுக்கொண்ட பின் அந்தந்த மொழிகளில் படம் இயக்குவேன். மோகன் லால் & மம்முட்டியை தமிழில் நடிக்க வைக்க முயற்சிப்பேன்" என லோகேஷ் கூறியுள்ளார்.