நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், கமலுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரும், நடிகர் சூர்யா ஒரு கவுரவ தோற்றத்திலும் நடித்திருந்தனர்.
வெளியான நாள் முதல், இன்று வரை அனைத்து இடங்களிலும், வசூல் வேட்டை நடித்து வரும் விக்ரம் திரைப்படம், அமோக வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், ஒரு Fanboy படத்தை எடுத்து பட்டையைக் கிளப்பி விட்டதாக, ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
கமல்ஹாசன் எழுதிய கடிதம்
அது மட்டுமில்லாமல், பிரபலங்கள் பலரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தினை பாராட்டி, கருத்துகளையும் வெளியிட்டு வந்தனர். தொடர்ந்து, ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் கூட, லோகேஷ் கனகராஜை பாராட்டி, அவ்வப்போது ட்விட்டரில் கருத்தினை பகிர்ந்தும் வந்தார். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்த கடிதமும், அதனை ட்விட்டரில் பகிர்ந்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரியாக்ஷனும், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கமல் எழுதி இருந்த கடிதத்தில், "அன்பு லோகேஷ், பெயருக்கு முன் "திரு" போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி, உங்கள் சாதனைகளுக்கான, பதவிக்கான மரியாதை பழைய படியே தொடரும், பொது வெளியில்.
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசம் ஆனவர்களாக இருப்பது என் அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர், முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைபட்டதை விட அதிகம். உங்களைப் பாராட்ட வார்த்தைகளை இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ ட்யூபைத் திறந்தால் வார்த்தையின் களஞ்சியமே தென்படும்.
எமோஷனல் ஆன லோகேஷ்
அதில் உள்ள திரு. லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையில் இருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது.. விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்" என கமல்ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், "Life time settlement letter. இதனை படிக்கும் போது, நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நன்றி ஆண்டவரே" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.