தமிழ்நாடு அரசின் 2009 முதல் 2014 வரையிலான தமிழ் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது. இதில் விருதுபெற்ற பல படங்களில் இயக்குநர் லிங்குசாமி தயாரித்த திரைப்படங்களுக்கு 18 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது பையா திரைப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கும், 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது கும்கி திரைப்படத்திற்காக டி.இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் கும்கி திரைப்படத்தில் சிறந்த பின்னணி பாடலை பாடியதற்காக கே.ஜி.ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோருக்கு 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி பாடகர்கள் விருது வழங்கப்படுகிறது. நடனத்தைப் பொறுத்தவரை இயக்குனர் ராஜூ சுந்தரத்துக்கு பையா திரைப்படத்திற்காக 2010 ஆம் ஆண்டு சிறந்த நடன ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக வழக்கு எண் 18/9 திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு அந்த வருடத்தின் சிறந்த இயக்குனர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான இரண்டாம் பரிசு கோலி சோடா திரைப்படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது அதே வருடத்தில் வெளியான மஞ்சப்பை திரைப்படத்திற்காக இயக்குனர் ராகவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பை திரைப்படத்தில் சிறந்த பின்னணி பெண் குரல் கொடுத்ததற்காக மீனலோசினிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படத்திற்கான சிறந்த சிறப்பு பட பரிசு, கும்கி திரைப்படத்திற்கும், அப்படத்தில் நடித்ததற்காக சிறப்பு பரிசு நாயகன் விக்ரம் பிரபுவுக்கும், நாயகி லட்சுமிமேனனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் எடிட்டர் என்விகே தாஸ் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2012-ஆம் ஆண்டு சிறந்த சண்டைப்பயிற்சிக்காக சில்வா மாஸ்டருக்கு வேட்டை திரைப்படத்துக்காகவும், 2014 ஆம் ஆண்டு சிறந்த சண்டை பயிற்சிக்காக திலிப் சுப்புராயனுக்கு மஞ்சப்பை திரைப்படத்திற்காகவும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சதுரங்க வேட்டை திரைப்படத்திற்காக சிறந்த கதை ஆசிரியர் விருது இயக்குனர் எ.வினோத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்துமே இயக்குனர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட திரைப்படங்கள். இந்த திரைப்படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்குவதை குறிப்பிட்டு, இயக்குனர் லிங்குசாமி தம்முடைய நன்றி கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “எங்களின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து மற்றும் வெளியிட்ட படங்களுக்கு 18 விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியிருக்கும் தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களோடு இணைந்து கைகோர்த்த திரைப்பட நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், பண்பலை நண்பர்கள், சமூக வலைதளங்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எங்களுடைய மேலான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விருதுகள் மேலும் எங்களை சிறந்த படங்களை தயாரிக்கும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தொடர்ந்து தரமான திரைப்படங்களை தயாரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.